'வேதாளம்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கப் போகும் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. 'வீரம், வேதாளம்' ஆகிய படங்களை இயக்கிய சிவா தான் அடுத்து அஜித் நடிக்கப் போகும் படத்தையும் இயக்கப் போகிறார். இந்தப் படத்தை பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்நிறுவனம் தற்போது பிரபு சாலமன் - தனுஷ் கூட்டணியில் ஒரு படத்தையும், எஸ்.ஆர்.பிரபாகரன் - விக்ரம் பிரபு கூட்டணியில் மற்றொரு படத்தையும் தயாரித்து வருகிறது.


அடுத்து அஜித் நடிக்க உள்ள படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளது. அஜித் மார்ச் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு லண்டனில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க உள்ளார். அதன் பின்னர் அவர் திரும்பி வந்ததும் ஜுன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் படத்தை முடித்து 2017 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

அஜித் - சிவா கூட்டணியில் உருவாக உள்ள மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் மனம் கவர்ந்த இயக்குனராக சிவா இருப்பதே தொடர்ந்து அவர் இயக்கத்தில் அஜித் நடிக்கக் காரணம் என்கிறார்கள்.

Post a Comment

 
Top